வானவில் பெண்கள்: ஆடு வளர்த்து ஏற்றம் பெறலாம்
கா
ல்நடை வளர்ப்பின் மூலம் பொருளாதார வளர்ச்சியடைந்த நாடாக டென்மார்க் உயர்ந்து நிற்பதுபோல் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட நம் நாட்டில் கால்நடை வளர்ப்பில் பெண்கள்ஆர்வம் காட்டினால் வாழ்வில் முன்னேற்றம் காணலாம் என்கிறார் கால்நடை மருத்துவ ஆராய்ச்சியாளர் டாக்டர் ஜெயந்தி. சேலம் கால்நடை அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் இவர்.
கல்வி கற்கும் உறுதி
சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த கருப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயந்தி. அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வியில் பிளஸ் டூ வரை படித்துப் பின்னர் கால்நடை மருத்துவக் கல்வியில் ஆராய்ச்சிப் பட்டம் பெற்றவர். கால்நடை மருத்துவம் படிப்பதற்குத் தான் பெண் என்பதாலேயே பல தடைகளைச் சந்திக்க வேண்டியிருந்ததாக ஜெயந்தி சொல்கிறார்.
எனினும், கல்வியைத் தொடர்வதில் உறுதியாக இருந்திருக்கிறார் சென்னை கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்தில் இளங்கலைக் கால்நடை அறிவியல் மாணவியாகச் சேர்ந்தார். அதுவரை கிராமத்துச் சூழலில் மட்டுமே வளர்ந்த ஜெயந்தி, சென்னையில் முதல் நாள் அனுபவமே மிரட்சியை ஏற்படுத்தியதாகச் சொல்கிறார்.
“கிராமத்தில் பிறந்து வளர்ந்த எனக்கு சென்னை ஒருவிதக் கலக்கத்தை ஏற்படுத்தியது. கல்லூரியில் இருந்த பெரும்பாலான மாணவர்கள் நகரங்களில் இருந்து வந்தவர்கள். அவர்களது பழக்கவழக்கங்கள், பகட்டான உடைகள், ஆங்கிலப் பேச்சு என எல்லாமும் சேர்ந்து எனக்கு பிரமிப்பை ஏற்படுத்தின. சரி, மூட்டையைக் கட்டிக்கொண்டு வீட்டுக்குப் புறப்பட்டுவிடலாம் என நினைத்தேன்.
ஆனால், கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் படிக்காத காரணத்தால் கூலி வேலைக்குச் சென்று வாழ்க்கையை நடத்துவதையும் நகரத்தைச் சேர்ந்தவர்களையும் அதிகாரிகளையும் அவர்கள் பிரமிப்பாகப் பார்ப்பதையும் பார்த்திருக்கிறேன். படிப்பு ஒருவரது வாழ்க்கையை மாற்றக்கூடிய வல்லமைகொண்டது என்பது புரிந்தது. படிக்கக் கிடைத்த வாய்ப்பை நழுவவிடக் கூடாது என்ற உறுதியுடன் கல்வியைத் தொடர்ந்தேன்” என்று பழைய நாட்களை மனதில் நிறுத்தியபடி சொல்கிறார் ஜெயந்தி.
கால்நடை மருத்துவக் கல்வியில் முதுநிலைப் பட்டம் பெற்றுவிட்ட ஜெயந்தி, இந்தத் துறையில் ஆராய்ச்சியாளராகப் பரிணமிக்க விரும்பினார்.
“கால்நடை மருத்துவக் கல்வியில் ஆராய்ச்சி பட்டத்தைப் பெற்றபோது பெண்களுக்குத் தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் இருக்க வேண்டியதன் அவசியத்தை முழுமையாக உணர முடிந்தது” என்கிறார்.
வழிகாட்டும் வாய்ப்பு
பெண்கள் முன்னேற்றத்துக்கு உதவக்கூடிய வாய்ப்புகள் இவருக்கு அன்றாடப் பணி மூலமே கிடைத்தன. “மேட்டூரை அடுத்த பாலமலையில் மலைவாழ் மக்கள் 500 பேருக்கு ஆடு, கோழி வளர்ப்பு குறித்து எங்கள் துறை மூலமாகப் பயிற்சி கொடுத்தோம். அயோத்தியாப்பட்டணத்தை அடுத்த சின்னகவுண்டாபுரம் கிராமத்திலும் மலைவாழ் மக்களுக்கு நாட்டுக்கோழி வளர்ப்பு,அதற்கான உதவிகளை வழங்கினோம்.
தமிழக அரசின் ஆடு வளர்ப்புத் திட்டத்தின் கீழ் 1,000 பெண்களுக்கு ஆடு வளர்ப்பு குறித்துப் பயிற்சி வழங்கியிருக்கிறோம். இதுபோன்ற பணிகளில் ஈடுபடுவது மனதுக்கு நிறைவாக உள்ளது” என்று சொல்லும் ஜெயந்தி, கால்நடை மருத்துவ ஆராய்ச்சிப் படிப்பின்போது சேலத்தின் சிறப்பு ஆட்டினமான சேலம் கருப்பு ஆடுகள் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டதுடன் இறைச்சி ஊறுகாய் என்ற புதிய வகை உணவைத் தயாரித்து அதற்குக் காப்புரிமையும் பெற்றிருக்கிறார்.
“டென்மார்க் நாடு கால்நடை வளர்ப்புத் தொழிலில் ஈடுபட்டு பொருளாதார வல்லரசாக உயர்ந்து நிற்கிறது. விவசாயத்தை அடிப்படையாகக்கொண்ட நம் நாட்டில் கிராமங்களில் வாழும் பெண்கள் நகரங்களுக்குச் சென்று கஷ்டப்படுவதைவிட, கால்நடை வளர்ப்புத் தொழிலில் ஈடுபட்டால் பொருளாதார வளர்ச்சி பெற முடியும். எங்கள் பயிற்சி ஆராய்ச்சி மையத்தில் கால்நடை வளர்ப்புத் தொழில் உள்ளிட்ட பயிற்சிகளும் வங்கி நிதி உதவிக்கான ஆலோசனைகளையும் வழங்குகிறோம்” என்று கிராமப்புறப் பெண்கள் மேம்பாட்டுக்கான வழியையும் காட்டுகிறார்.
Comments
Post a Comment