டிங்குவிடம் கேளுங்கள்: தினமும் குளிக்க வேண்டுமா?
இரண்டு கொம்புகளுடைய காண்டா மிருகம் உண்டா, டிங்கு?
இரட்டைக் கொம்பு காண்டாமிருகங்கள் இருக்கின்றன, பிராங்க் ஜோயல். வெளுத்த காண்டாமிருகங்களுக்கும் சுமத்திரா காண்டாமிருகங்களுக்கும் இரண்டு கொம்புகள் உள்ளன. இந்தியக் காண்டாமிருகங்களுக்கும் ஜாவா காண்டாமிருகங்களுக்கும் ஒற்றைக் கொம்புதான். காண்டாமிருகம் பிறந்து 6 மாதங்களுக்குப் பிறகே கொம்பு முளைக்கும். இந்தக் கொம்புகளை வைத்து எதிரிகளுடன் போரிடும். குட்டிகளைக் காப்பாற்றும். மரக்கிளைகளை முறிக்கும். தண்ணீருக்காக மண்ணைத் தோண்டும்.
தினமும் குளிக்க வேண்டியது அவசியமா, டிங்கு?
சுத்தத்துக்காகவும் ஆரோக்கியத்துக்காகவும் தினமும் ஒரு முறை, அல்லது இரு முறை குளித்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் கொலம்பியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவர் எலைன் லார்சன், தினமும் குளிக்க வேண்டிய அவசியம் இல்லை என்கிறார். பாஸ்டனைச் சேர்ந்த தோல் ஆராய்ச்சியாளரும் மருத்துவருமான ரானெல்லா ஹிர்ஸ்க், தினமும் குளித்தால் தோலுக்குப் பாதிப்பு என்றும் நம் உடலில் சுரக்கும் எண்ணெயே தோலைப் பாதுகாக்கும் என்கிறார். ஆனால் நம் நாட்டு வெயிலுக்குக் குளிக்காமல் இருந்தால் வியர்வை நாற்றம் தாங்க முடியுமா, சர்வேஷ்? குளித்தால்தான் உடலும் மனமும் புத்துணர்ச்சியடைகின்றன. அதனால் இருவேளை குளிக்காவிட்டாலும் ஒருவேளை குளிப்பதுதான் நமக்கும் நம் அருகில் இருப்பவர்களுக்கும் நல்லது!
Comments
Post a Comment