வேலை வேண்டுமா? - பாரத ஸ்டேட் வங்கிப் பணி 8301 எழுத்தர் தேவை
பா
ரத ஸ்டேட் வங்கியில் எழுத்தர் பதவியில் (Junior Associate-Customer Support and Sales) 8,301 பணியிடங்கள் போட்டித் தேர்வு மூலமாக நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணிக்குப் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். வயது 20 முதல் 28-க்குள் இருக்க வேண்டும்.
தேவையான தகுதி
மத்திய அரசின் இட ஒதுக்கீட்டு விதிமுறைகளின்படி, எஸ்.சி, எஸ்.டி. வகுப்பினருக்கு 5 ஆண்டுகளும் ஓ.பி.சி. எனப்படும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 3 ஆண்டுகளும் மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். விண்ணப்பதாரர்கள் எந்த மாநிலத்தில் உள்ள காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கிறார்களோ அம்மாநில மொழியில் எழுதவும் வாசிக்கவும் பேசவும் புரிந்துகொள்ளவும் திறன் பெற்றிருக்க வேண்டும். இந்தத் திறன்களைச் சோதிக்கும் விதமாக எழுத்துத் தேர்வு முடிந்ததும் மொழித்திறன் தேர்வு நடத்தப்படும்.
இரண்டு விதமான தேர்வு
விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு அடிப்படையில் பணிக்குத் தேர்வுசெய்யப்படுவார்கள். நேர்முகத் தேர்வு கிடையாது. எழுத்துத் தேர்வு என்பது முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு ஆகிய தேர்வுகளை உள்ளடக்கியது. அப்ஜெக்டிவ் முறையில் இரண்டு தேர்வுகளுமே ஆன்லைன்வழியில்தான் நடத்தப்படும்.
முதல்நிலைத் தேர்வில், பொது ஆங்கிலம், அடிப்படைக் கணிதம், ரீசனிங் ஆகிய 3 பகுதிகளில் இருந்து 100 கேள்விகள் இடம்பெறும். மொத்த மதிப்பெண் 100. ஒரு மணி நேரத்தில் விடை அளிக்க வேண்டும். இதில் தேர்ச்சி பெறுபவர்கள் அடுத்த கட்டத் தேர்வான முதன்மைத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள். இதில், பொது அறிவு மற்றும் நிதி அறிவு, ஆங்கிலம், கணிதம், ரீசனிங் மற்றும் கணினி அறிவு ஆகிய 4 பகுதிகளில் இருந்து 190 கேள்விகள் கேட்கப்படும். மதிப்பெண் 200. தேர்வு நேரம் 2 மணி 40 நிமிடம்.
முதன்மைத் தேர்வில் வெற்றிபெறுவோருக்கு மொழித் திறன் தேர்வு நடத்தப்படும். எழுத்தர் பதவிக்கு சம்பளம் தோராயமாக ரூ.24 ஆயிரம். எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கும் சிறுபான்மையினருக்கு (கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் போன்றோர்) பாரத ஸ்டேட் வங்கி சார்பில் தேர்வுக்கு இலவசப் பயிற்சி அளிக்கப்படும். இது குறித்து தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது குறிப்பிட வேண்டும்.தகுதியுடைய பட்டதாரிகள் www.sbi.co.in/careersஎன்ற இணையதளத்தைப் பயன்படுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.
Comments
Post a Comment