குங்குமவல்லிக்கு வளைகாப்பு! மறக்காம வந்துருங்க..!
பிரசவத்தை மறுஜென்மம் என்று சொல்லுவோம். அப்பேர்ப்பட்ட பிரசவத்துக்கு முன்னதான காலத்தில் முக்கியமான சடங்காக நடைபெறுவதுதான் வளைகாப்பு விழா. உலகில் உள்ள பெண்களின் பிரசவம், சுகப்பிரசவமாக நிகழ்வதற்கு அருள்பாலிக்கும் அன்னை... குங்குமவல்லி அம்பாள். ஆகவே ஒவ்வொரு தை மாதத்தின் 3வது வெள்ளிக்கிழமையில் குங்குமவல்லி அம்பாளுக்கு, வெகு விமரிசையாக நடந்தேறுகிறது வளைகாப்புத் திருவிழா!
எங்கே குடிகொண்டிருக்கிறாள் குங்குமவல்லி அம்பாள்.
திருச்சியின் மையப்பகுதியான உறையூரில், மையம் கொண்டு, உலகுக்கே அருள் வழங்கிக் கொண்டிருக்கிறாள் அன்னை குங்குமவல்லி. இங்கே சிவனாரின் திருநாமம் தான் தோன்றீஸ்வரர். அழகிய ஆலயம். சாந்நித்தியம் நிறைந்த திருத்தலம்.
யாருக்கு வளைகாப்பு நடந்தாலும், முன்னதாக குங்குமவல்லிக்கு கை நிறைய வளையல்களை அடுக்கி அழகு பார்த்துவிட்டுத்தான், கர்ப்பிணிக்கு வளைகாப்பு விழாவை நடத்துகின்றனர், பெண்ணின் வீட்டார். .ஒருவகையில், இப்படியான பிரார்த்தனையுடன் வளையல் கொண்டு வருவதால், அனுதினமுமே வளையல் குலுங்க கொலுவிருக்கிறாள் நாயகி குங்குமவல்லி!
தாயைப் போல் கருணையும் கனிவும் கொண்டு காட்சி தருகிறாள் குங்குமவல்லி அம்பாள். கர்ப்பிணிகள் தினமும் இவளை தரிசித்துச் செல்கின்றனர். நம் சந்ததியை வாழச் செய்யும் கண்கண்ட தெய்வம் என்று போற்றிக் கொண்டாடுகின்றனர் பக்தர்கள்!
அனுதினமும் வளையல் அணிவித்து வேண்டிக் கொள்ளும் பக்தர்கள் உண்டு என்றாலும், தை மாதத்தின் 3-வது வெள்ளிக்கிழமை அன்று விமரிசையாக நடைபெறுகிறது வளைகாப்புத் திருவிழா. இந்த நாளில், திருச்சி மற்றும் அக்கம்பக்கத்து ஊர்களில் இருந்து ஏராளமான கர்ப்பிணிகள், அடுக்கடுக்கான வளையல்கள், தேங்காய் - பழம் என வந்து, அம்மனை தரிசித்து வேண்டி கொள்கின்றனர்.
இந்த நாளில் அம்பாளுக்கு தீர்த்தம் எடுத்து வருதல் உள்ளிட்ட அத்தனை சடங்கு - சாங்கியங்களையும் கர்ப்பிணிகளே செய்வர் என்பது விசேஷம். இந்த நாளில், அம்பாளுக்கு வளைகாப்பு விழா நடத்தி பிரார்த்தனை செய்தால், சுகப்பிரசவம் நிகழும் என்பது ஐதீகம்! நல்ல முறையில் குழந்தை பிறக்கும்; தாயும் சேயும் ஆரோக்கியமாக வாழ்வார்கள். அந்தக் குடும்பம் சுபிட்சமாகவும் நிம்மதியுடன் வாழும் என உணர்ச்சிப் பெருக்குடன் சொல்கிறார்கள் பெண்கள்.
மறுநாள்... சனிக்கிழமை அன்று, குங்குமவல்லி, குகாம்பிகாவாகக் காட்சி தருகிறாள். அதாவது முதல் நாள் வளைகாப்பு. அடுத்த நாள், மைந்தன் முருகனை, பாலகன் முருகப்பெருமானை மடியில் வைத்திருக்கும் அலங்காரத்துடன் காட்சி தருகிறாள். ‘நமக்கொரு குழந்தை பொறக்கலியே...’ என்று வேதனையில் தவித்து மருகிக் கண்ணீர் விடும் பெண்கள், பாலகனாக குமரனை மடியில் வைத்திருக்கும் குங்குமவல்லியைத் தரிசித்துப் பிரார்த்தித்தால்... குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறுவர் என்பது ஐதீகம்!
மூன்றாம் நாளான ஞாயிற்றுக் கிழமை அன்று, திருமணப் பெண் போல மங்கலகரமானத் தோற்றத்தில் காட்சி தருகிறாள் குங்குமவல்லி. இந்தக் கோலத்தில் அம்பாளை தரிசித்தால் தடைப்பட்ட திருமணம் விரைவில் நடந்தேறும் என்கிறார் கோயிலை நிர்வகித்து வரும் சித்ரா.
வீட்டில் சீக்கிரமே மங்கல காரியங்கள் நடைபெறுவதற்கு குங்குமவல்லி என்றைக்கும் துணையிருப்பாள் என்கின்றனர் பக்தர்கள். அன்றைய தினம், மஞ்சள் சரடு, குங்குமம், தேங்காய் - பழம், பூ ஆகியவற்றுடன் வந்து எண்ணற்ற கன்னிப் பெண்கள் அம்மனை தரிசித்துச் செல்கின்றனர்.
நாளை வெள்ளிக்கிழமை... அம்மனுக்கு வளைகாப்பு. தவறாமல், சென்று தரிசியுங்கள். பிள்ளை வரம் தந்தருள்வாள். சுகப்பிரசவம் நடத்தித் தருவாள். நம் குங்குமத்தைக் காத்தருள்வாள் குங்குமவல்லி!
Comments
Post a Comment