வரும் வழியில் :
தண்ணீரை பிடித்துக் கொண்டு வரும் வழியிலும் அந்த ஹோட்டலை வைத்தக் கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே நடந்தேன். அம்மா.... அங்கன தண்ணிப் பிடிக்க போவோம்ல அங்க புதுசா ஹோட்டல் திறந்திருக்காங்கம்மா இன்னக்கி நைட்டு அங்க போய் சாப்டலாமா பரோட்டா சாப்டலாம்மா....
காசு என்ன மரத்துலயா காய்க்கிது. ரொம்ப காசு சொல்வான் அடுத்த மாசம் பாத்துக்கலாம்.
நானே போறேன் :
மறு பேச்சு ஏது. அந்த கடையை பார்க்கிற ஆவலில் அம்மா சொல்வதற்கு முன்பே நானாகவே தினமும் குடத்தை எடுத்து தண்ணீர் பிடிக்க ஓடினேன். அதாவது தண்ணீர் பிடிக்கிற சாக்கில் அந்த கடையைப் பார்க்க.
ஒரு நாள் டிவி போடப்பட்டு ஏதோ சினிமா பாடல் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. கடை வாசாலில் ஐந்தாறு பேர் கூட்டமாக நின்றிருந்தார்கள். நானும் சற்று தூரத்திலிருந்து எட்டி எட்டி பார்த்தேன். என்னுடன் படித்த சிறுமிகள், பக்கத்து விட்டுச் சிறுமிகள் என கூட்டம் கூடிவிட்டது. எல்லாரும் பாட்டிற்கு ஏத்த மாதிரி குதித்து குதித்து நடனமும் ஆடிக் கொண்டிருந்தார்கள்.
பக்கத்துல வந்து பாரு :
நீண்ட நேரத்திற்கு பிறகு வெளியில் இருக்கும் டீக்கடையில் இருந்து என்னை யாரோ கவனிப்பது தெரிந்தது. சட்டென பார்க்க, அவர் தலையை குனிந்து கொண்டார். பிறகு அவராகவே பக்கத்துல வந்து டிவி பாருங்க ஏன் அங்க நிக்கிறீங்க என்று சொல்ல நான் பயந்து கொண்டு இல்ல வீட்ல அம்மா தேடும் என்று சொல்லி ஓடி வந்து விட்டேன்.
அதன் பின்னர் ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் சிரிப்பார். நானும் சிரிப்பேன். எங்க படிக்கிறீங்க வீடு எங்க என்று போகும் போதும் வரும் போதும் பேசிக் கொள்வோம்.
நம்ம கடைல சாப்பிடலாமே :
இது மாமா கடை மாமாவுக்கு துணைய இங்க இருக்கேன். எல்லா வேலையும் பாப்பேன், நம்ம கடைன்னு கல்லாபெட்டிலயே உக்காந்திருந்தா வேல நடக்குமா என்று கேட்டுக் கொண்டே டேபிளில் இருக்கிற எச்சில் இலையை எடுத்து துடைத்து சுத்தப்படுத்தினார். வெளியில் வந்து இட்லி ஊத்துவது, வெங்காயம் நறுக்குவது, டீ போடுவது என எல்லா வேலையும் செய்து பம்பரமாக சுழன்று கொண்டிருப்பார்.
அன்றும் அப்படி அந்த கடையை கடக்கும் போது, சிரித்துக் கொண்டே வாங்க சாப்ட்டு போங்க என்றார்.
சிரித்துக் கொண்டே மறுத்து விட்டேன்.
தேடல் :
அதன் பிறகு ஒவ்வொரு முறையும் கடையை நோட்டம் விடுவதற்கு பதிலாக அந்த நபரை நோட்டம் விட ஆரம்பித்தேன். கொடுமை அருகில் சென்று பேசத்தான் துணிச்சலை கொடுக்கவில்லை. இருவரும் பார்ப்போம் சிரிப்போம் வெட்கப்பட்டு குனிந்து ஓடிவிடுவேன். இப்படியே சில மாதங்கள் தொடர்ந்தது.
அவனைப் பார்த்தாலே :
அன்றும் வழக்கம் போல தண்ணீரை எடுத்து வருகிறேன் காலி குடத்துடன் கிளம்பிவிட்டேன். வழியில் ஹோட்டலைப் பார்த்தால் அங்கே அவனைக் காணவில்லை. என்றும் இல்லாத அளவிற்கு இன்றைக்கு ஓர் அமைதி, ஓர் அதிர்சி.
இரண்டுமே என்னை தாக்கியது. உரிமையாக எங்க போன, ஏன் என்னைய பாக்க வர்ல என்று சட்டையை பிடித்து கேட்க வேண்டும் என்று தோன்றியது ஆனால் கொடுமை அவனைப் பார்த்தாலே தலையை குனிந்து ஓடி விடுகிறேனே.
என்னத் தான தேடுற :
ஒரு நடை தண்ணீரை எடுத்துக் கொண்டு போய்விட்டேன். வீட்டிற்கு சென்றும் மனம் கேட்கவில்லை, அப்ப எங்கயாவது கடைக்கு போயிருப்பான். எப்பயும் இந்த நேரத்துக்கு நான் வருவேன்னு தெரியும் என்னை பாக்குறதுக்காக அவன் காத்துட்டு இருப்பான் நம்ம இப்ப மறுபடியும் போவோம் என்று எனக்கு நானே சமாதனம் சொல்லிக் கொண்டு அம்மா அதிசயமாக வேண்டாம் என்று சொல்ல சொல்ல குடத்தை எடுத்துக் கொண்டு கிளம்பினேன்.
ஹோட்டலை நெருங்க மெதுவாக காலடி எடுத்து வைக்க ஆரம்பித்தேன். மெல்ல எட்டு வைத்தபடியே ஹோட்டலில் அவன் இருக்கிறானா? உள்ளே வேலையாய் இருக்கிறானா என்று சற்று எட்டியும் பார்க்க ஆளே இல்லை. ஏமாற்றத்துடன் ஒருவாட்டி முகத்தை பார்த்துவிடமாட்டோமா என்ற ஏக்கத்துடன் தவித்துக் கொண்டிருக்க பின்னாலிருந்து
என்னையத் தான தேடுற என்றது ஒரு குரல்.
நாளைக்கு சாய்ந்தரம் :
அதிர்ச்சியுடன் திரும்பினால் அவன் தான். ஹோட்டலில் அவனை தேடிக் கொண்டிருந்தால் அவன் எனக்கு பின்னால் நின்று என்னை நோட்டம் விட்டிருக்கிறான். சிரித்துக் கொண்டே மிக அருகில் பார்த்த மகிழ்ச்சியில் துள்ளி குதித்து ஓடினேன்.
அதன் பிறகு என்னிடம் நிறைய மாற்றங்கள் தெரிய ஆரம்பித்தன. ஆம், அவனைத் தவிர எல்லாரும் என்னில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களை கண்டு கொள்ள ஆரம்பித்தார்கள்.
ஒரு நாள் அந்த ஹோட்டலை கடக்கும் சமயத்தில் நாளைக்கு சாய்ந்தரம் முருகன் கோவிலுக்கு வா என்றான் சைகையில். நான் பார்த்தும் பிறர் யாரேனும் பார்க்கிறார்களா என்று நோட்டம் விட்டபடியே தலையசைத்தேன்.
முருகன் கோவிலில் :
சொன்னது போலவே கோவிலில் சந்தித்துக் கொண்டோம், கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள் பார்த்துக் கொண்டே பேசத்தயங்கிய நாங்கள் இப்போது தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அருகருகே நிற்கிறோம்.
காரணமில்லாது ஓர் பதட்டம் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் ஓர் உணர்வு. ஒரு கணம் காலுக்கு அடியில் பூமி நழுவது போலவும் இருந்தது.
என்ன பேசுவது? எப்படி கேட்பது நானேவா கேட்பது? என்னை தவறாக நினைத்துக் கொள்ள மாட்டானா.
மௌனம் :
இருவரும் பார்த்துக் கொண்டோம். சிரித்தோம். சுற்றும் முற்றும் யாராவது எங்களைப் பார்க்கிறார்களா என்று நோட்டம் விட்டோம்.
நான் எனக்குள் சொல்லிடு இத விட்டா வேற சந்தர்ப்பம் கிடையாது சொல்லிடு என்று என்னுள் சொல்லிக் கொண்டிருக்கிறேன். இன்னொருபக்கம் அவனா சொல்லட்டும் என்றும் தோன்றுகிறது. நீண்ட நேரத்திற்கு பிறகு
தலையை குனிந்து கொண்டே நம்ம ஒரு ஹோட்டல் ஆரம்பிக்கலாமா? என்றான்
எனக்கு எதுவும் புரியவில்லை. ஹோட்டலா நம்மளா..... என்னட்ட காசு எதுவுமில்லையே அதுவும் இப்போ நான் ஸ்கூல் படிச்சிட்டு இருக்கேன் நான் ஹோட்டல் ஆரம்பிச்சு என்று புலம்பிக் கொண்டே யோசிக்க
சட்டென அவன் சொன்னதன் உள்ளர்த்தம் புரிந்து கொண்டேன். நான் புரிந்து கொண்டதை அவனும் யூகித்து விட்டான்.
Comments
Post a Comment