அனுமன் இருக்க பயமேன்!
எத்தனை இன்னல்கள் இருந்தாலென்ன... அனுமனை வணங்குங்கள். அத்தனையும் தவிடுபொடியாக்கி, அருள்வார் அஞ்சனை மைந்தன் என்று போற்றுகின்றனர் பக்தர்கள்.
கஷ்டமும் கவலையும் யாருக்குத்தான் இல்லை. துக்கமும் வேதனையும் அனுபவிக்காதவர்கள் என்று யார் இருக்கிறார்கள் இங்கே. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான சோகங்கள். இவற்றில் இருந்து, ஒரு மீட்சி கிடைக்காதா, இதையெல்லாம் கடந்து, நல்லதுகள் நமக்கு நடக்காதா என்று ஏங்கித்தவிக்கிற சாதாரண மனிதர்கள்தானே நாம்.
ஆனானப்பட்ட, ஸ்ரீராமபிரானுக்கே அவ்வளவு பிரச்னைகள். மனிதனாகப் பிறந்து, மனிதனாக வாழ்ந்து, சாதாரண மனிதரைப் போலவே வாழ்ந்து காட்டிய உன்னத மனிதருக்கு, உத்தம புருஷருக்கு பெரிதும் துணை நின்றவர்... ஆஞ்சநேயப் பெருமான்.
அஞ்சனை மைந்தன் இருக்க எதற்கும் அச்சம் கொள்ளத்தேவையில்லை. எதன் பொருட்டும் வருந்த வேண்டிய அவசியமே இல்லை. அருகில் பெருமாள் கோயில் இருக்கும். அங்கே ஆஞ்சநேயர் தனிச்சந்நிதியில், நமக்கு அருள்வதற்காகவே காத்திருக்கிறார்.
இன்னும் பல ஊர்களிலும் பகுதிகளிலும் தனிக்கோயிலில் இருந்து, அருளாட்சி செய்கிறார். அனுமனை மனதார வேண்டிக் கொண்டு, 108 முறை ஸ்ரீராமஜெயம் எழுதுங்கள். அந்த ஸ்ரீராம ஜெயம் எழுதியதைக் கொண்டு, மாலையாக்குங்கள். அந்த மாலையுடன், வெற்றிலை மாலையோ துளசி மாலையோ அனுமனுக்கு சார்த்தி, மனதாரப் பிரார்த்தனை செய்யுங்கள்.
மனதில் பலம் சேர்ப்பார் அனுமன். மனோ தைரியம் தருவார் வாயுமைந்தன். மங்கல காரியங்களுக்கு பக்கத் துணையாக இருப்பார். துன்பங்களை தூர விரட்டுவார். இன்னல்கள் இருந்த இடம் தெரியாமல் போகச் செய்வார் என்பது உறுதி.
Comments
Post a Comment