வேலை வேண்டுமா? - இஸ்ரோவில் பணி
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவில் விஞ்ஞானிகள், தொழில்நுட்ப நிபுணர்கள், நிர்வாகப் பிரிவு அலுவலர்கள், பணியாளர்கள் அனைவரும் போட்டித் தேர்வு மூலம் தேர்வுசெய்யப்படுகிறார்கள். தற்போது விஞ்ஞானி, பொறியாளர் பதவியில் 106 காலியிடங்கள் நிரப்புவதற்கு இஸ்ரோ அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. எலெக்ட்ரானிக்ஸ் பிரிவில் 32 காலியிடங்கள், மெக்கானிக்கல் பிரிவில் 45 இடங்கள், கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் 29 இடங்கள் உள்ளன.
தகுதியும் தேர்வு முறையும்
இவற்றுக்கு பி.இ.,. பி.டெக். பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். முதல் வகுப்புத் தேர்ச்சி அவசியம். நடப்புக் கல்வி ஆண்டில் (2017-2018) பொறியியல் படிப்பை முடிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு 35. தகுதியுடையோர் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வின் அடிப்படையில் பணிக்குத் தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்துத் தேர்வில் அப்ஜெக்டிவ் முறையில் 80 கேள்விகள் கேட்கப்படும். இந்தத் தேர்வு சென்னை, பெங்களூரு, திருவனந்தபுரம் உள்பட நாடு முழுவதும் 12 முக்கிய நகரங்களில் நடைபெறும். இதில் வெற்றிபெறுவோர் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். இத்தேர்வில் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண் பெற வேண்டும். அவர்கள் தேர்வுப் பட்டியலுக்குப் பரிசீலிக்கப்படுவார்கள்.
உரிய கல்வித் தகுதியும் வயது வரம்பும் உடைய பொறியியல் பட்டதாரிகள் இஸ்ரோ இணையதளத்தைப் (www.isro.gov.in) பயன்படுத்தி விண்ணப்பிக்க வேண்டும். பிரிண்ட் அவுட் எடுக்கப்பட்ட ஆன்லைன் விண்ணப்பத்தைத் தேவையான ஆவணங்களுடன் பெங்களூருவில் உள்ள இஸ்ரோ தலைமை அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும். ஆன்லைன் விண்ணப்ப முறை, தேர்வுக் கட்டணம், சம்பளம், சலுகைகள் உள்ளிட்ட இதர விவரங்களை இஸ்ரோ இணையதளத்தில் விரிவாகத் தெரிந்துகொள்ளலாம்.
Comments
Post a Comment